Sun. Apr 27th, 2025

குமரியும் இமயமும் கைகோர்க்கும் மதுரையில்
கொடியோடு நடைபோட வாருங்கள் தோழரே!
சமருக்கு புதியதோர் பாரதப் போருக்கு
சாணைகள் தீட்டலாம் வாருங்கள் தோழரே!

விடியாத இரவுக்கு விடிகாலை யாகவும்,
வெயில் வெம்மை நோய் தீர்க்கும் இளவேனிலாகவும்,
விடைகாண அரிதான இந்தியக் கேள்விக்கு
விழியோர மின்னலில் விடைஒன்று தேடவும்,

வீரர்தம் கூட்டமே வருகவே வருகவே!
வெற்றியின் தோளோடு தோள்சேர்ந்து வருகவே!
பூரதம் போல்வரும் பாரதத் தேருக்கு புரவியாய் வருகவே பாட்டாளி வர்க்கமே!

எத்தனை சோகங்கள் எங்களின் வீட்டிலே!
எத்தனை தாகங்கள் இந்தியன் நாவிலே!
அத்தனை சோகமும் தாகமும் கூடியே
ஆக்ரோசம் ஆகணும் போர்நடைப் பாட்டிலே!

செம்படை அணியிலே சென்றிடும் அனுபவம்
திருவிழா வைபவ அனுபவம் அல்லவே!
நானந்த ஆனந்த அனுபவம் யாதென
நற்றமிழ் பாட்டிலே கூறுவேன் தோழரே!

பஞ்சாபின் வேர்வையும், பீகாரின் வேர்வையும்,
பனிமூடும் காஷ்மீர பூமியின் வேர்வையும்,
வாசத்தில் ஒன்றுதான் என்கிற அனுபவம்
செம்படைப் பேரணி தருகிற அனுபவம்!

அருகிலே நடைபோடும் ஆந்திரத் தோழனின்
உதிரத் துடிப்பினை உற்றுநீ கேட்கையில்
தெலிங்கா னாவில் அன்று சிந்திய ரத்தத்து
சீற்றத்தின் ஓசையை செவிகளில் கேட்கலாம்!

நாளைக்குச் சிவப்பாக மலர்கின்ற பாரத
நறுமணச் சோலையின் சாயலை அதோ அந்த
வங்காளி மேனியின் வண்ணத்தில் காணலாம்!
வரும்புதுத் தென்றலை சுவாசத்தில் உணரலாம்!

செங்கொடி பிடித்தொரு செங்கொடி நடக்குமா?
ஆம் அந்த கேரளத் தோழியின் அங்கத்துத்
தங்கத்தில் நீஅந்த தரிசனம் காணலாம்!
சிங்கத்தின் சிலிர்ப்பையும் விழியிலே காணலாம்!

கர்நாட கத்தின் கரிசல் புழுதியை,
கங்கைப் படுகையின் களிமண் புழுதியை,
தார்பாலை வனத்து தாகப் புழுதியை,
படைப்பே ரணியின் பாதங்கள் தாங்கிவரும்!

அரைநிர் வாணத்தை ஆடையாய் அணிகிற
ஏழை இந்தியாவின் இதய கீதத்தை
செம்படைப் பேரணி செல்லும் வழிகளில்
பாதப் புழுதிகள் பாடிடக் கேட்கலாம்!

“விஸ்வ ரூபமாய் விரிகின்ற பாரதம்
வாமன ரூபமாய் வடிவம் எடுத்ததோ?”
என்னும் படிக்கதோ இளைய இந்தியா
கைகள் உயர்த்தி கர்ஜித்து நடக்குமே!

ஆயிரம் ஆயிரம் பாதங்க ளோடு
உனது பாதமும் ஒன்றாய் நடக்கையில்
அத்தனை பாதத்தின் மொத்த வலிமையும்
உனது பாதத்தில் உணரலாம் தோழனே!

ஆயிரம் ஆயிரம் முஷ்டிக ளோடு
உனது முஷ்டியும் ஓங்கி உயர்கையில்
அத்தனை முஷ்டியின் மொத்த வலிமையும்
உனது முஷ்டியில் ஒன்றாய்த் திரளுமே!

மனிதன் என்றிடும் சின்னஞ் சிறுவனோ
மாமனி தன்எனப் பென்னம் பெரியனாய்
மாற்றம் பெற்றிடும் மந்திரம் தருவது
செம்படைப் பேரணி மாநா டென்பது!

நாளை இந்தியா நமது கைகளில்!
ஆளும் வர்க்கமோ காலுக் கடியினில்!
நமது சூரியன் இமயத்தின் ஓரத்தில்
ஜனனம் ஆகுது பார்கொஞ்ச நேரத்தில்!

வாருங்கள் கீழைய தேசத்து மாந்தரே!
வரலாறு நமக்காகத் தோரணம் கட்டுமே!
எத்தனை பெருந்தடை எதிர்வந்த போதுமே
எம்படை செம்படை நிச்சயம் வெல்லுமே!

இறக்கங்கள் இருந்தாலும் இறுதியில் ஏற்றமே!
இதுதானே மார்க்சியம் அளிக்கின்ற போதமே!
எங்கெங்கும் ஓங்கார இசைநாதம் கேள்! அது
இதுவரை இல்லாத பிரபஞ்ச கீதமே!

காயங்கள் எத்தனை நாம்பட்ட தென்பதை
கணக்குகள் பார்க்கலாம் வாருங்கள் தோழரே!
கண்களில் இந்தியக் கனவுகள் எத்தனை
எண்ணிநாம் பார்க்கலாம் வாருங்கள் தோழரே!

காஷ்மீரின் பூம்பனிக் குளிரை ஓர் கண்ணிலும்
ராஜஸ் தானத்து வெயிலை ஓர் கண்ணிலும்
தேக்கிய பாரதம் மதுரைக்கு வருகுது!
செல்லலாம் இணைசேர்ந்து வாருங்கள் தோழரே!

குமரியும் இமயமும் கைகோர்க்கும் மதுரையில்
கொடி யோடு நடைபோட வாருங்கள் தோழரே

தோழர். நவகவி

Related Post