Mon. Apr 28th, 2025

சிபிஎம் அகில இந்திய மாநாடு: மூன்றாம் நாள் நிகழ்வுகள் 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற்றது. மாநாட்டின் மூன்றாம் நாளான ஏப்ரல் 4-ம் தேதி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் முகமது சலீம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் மற்றும் வலியுறுத்தல்கள் குறித்து அவர் விளக்கினார். அவற்றைத் தனித்தனி தலைப்புகளில் காணலாம்.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு

மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் உடனடியாக நடத்த வேண்டும் என்று மாநாடு வலியுறுத்தியுள்ளது.
நியாயமான தொகுதி மறுவரையறை
* மக்கள்தொகை கட்டுப்பாட்டை வெற்றிகரமாக நிறைவேற்றிய மாநிலங்கள் பாதிக்காத வகையில், சம வாய்ப்புள்ள, நியாயமான தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும்.
* தொகுதி மறுவரையறை இயந்திரகதியில் மக்கள்தொகை அடிப்படையில் மட்டும் இருக்கக் கூடாது; அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை
தேர்தல் ஆணையம் சுதந்திரமான, வெளிப்படையான, நம்பகமான அமைப்பாக செயல்படுவதுடன், நியாயமான சமதளப் போட்டி அடிப்படையில் தேர்தல்கள் நடத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்.


“ஒரே நாடு, ஒரே தேர்தல்” திட்டத்திற்கு எதிர்ப்பு

மோடி அரசின் “ஒரே நாடு, ஒரே தேர்தல்” திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மாநாடு ஒருமனதாக வலியுறுத்தியுள்ளது.
கேரள அரசுக்கு ஆதரவு
கேரள இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு மாநாடு தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவு


* பாலஸ்தீன மக்கள் மீது கொடூரமான இன அழிப்பை நடத்தி வரும் அமெரிக்க ஆதரவு யூதவெறி இஸ்ரேல் அரசை மாநாடு கண்டித்துள்ளது.
* தாய் நாட்டுக்காகப் போராடிவரும் பாலஸ்தீனர்களின் பிரச்சனைக்கு, ‘இரண்டு நாடு கொள்கை’ அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
* பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவும், ஒருமைப்பாடும் தெரிவித்து சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் பாலஸ்தீன மக்கள் அணியக்கூடிய “காபியா” எனும் துண்டை தோளில் அணிந்து தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.


வக்பு திருத்தச் சட்ட எதிர்ப்பு

வக்பு திருத்தச் சட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அடையாள அரசியல் அடிப்படையில் எதிர்க்கவில்லை. அரசியல் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமையை மறுப்பதால்தான் எதிர்ப்பதாக முகமது சலீம் தெரிவித்தார்.


இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஆர். அருண்குமார், தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் வெ. ராஜசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Post