மதுரையில் நடைபெற்ற 23வது அகில இந்திய மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று (2.4.2025), தமுக்கம் திறந்தவெளி அரங்கில் தோழர் கே பி ஜானகி அம்மாள் நினைவு மேடையில் பாப்பம்பட்டி ஜமா மற்றும் திண்டுக்கல் சக்தி கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தின.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்ற மேடை நிகழ்ச்சிக்கு தோழர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். தோழர் களப்பிரன் அனைவரையும் அன்புடன் வரவேற்றுப் பேசினார். இந்த முக்கிய நிகழ்வில் தமிழறிஞர் சாலமன் பாப்பையா, புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் ராஜூமுருகன் மற்றும் இயக்குனரும் நடிகருமான சசிகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
முதலில் உரையாற்றிய இயக்குனர் ராஜூமுருகன், இந்த மாநாடு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்று குறிப்பிட்டார். மேலும், எளிய மக்களுக்கான வாய்ப்புகளை உறுதி செய்யும் ஒரே இயக்கம் இடதுசாரி இயக்கம் தான் என்று அவர் அழுத்தமாக கூறினார். “தோழர்” என்ற சொல்லே தனது வாழ்க்கையில் பெருமைமிக்க உணர்வை ஏற்படுத்துவதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய இக்கட்டான சூழலை சுட்டிக்காட்டிய அவர், வர்ணாசிரமத்திற்கும் வர்க்க முரண்பாடுகளுக்கும் எதிராக தொடர்ந்து போராடும் ஒரே இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம் தான் என்று குறிப்பிட்டார். காவி சித்தாந்தத்திற்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து போராட வேண்டியதன் அவசியத்தையும், அதற்கு சிபிஐஎம் தலைமை தாங்க வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தினார். தேர்தல் வியூக வகுப்பாளர்களை சந்திக்கும் தற்போதைய அரசியல் போக்கிற்கு மாறாக, மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் நலனுக்காக போராடும் இயக்கமாக கம்யூனிஸ்ட்டுகள் திகழ்வதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
அடுத்து பேசிய திரைப்பட இயக்குனரும் நடிகருமான சசிகுமார், ஒவ்வொரு முறை தமுக்கம் மைதானத்தை கடக்கும்போதும் மாணவர்கள் படிப்பதற்காக பூங்காவில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் தன்னை மிகவும் கவர்வதாகவும், இத்தகைய பயனுள்ள நடவடிக்கைகள் தொடர கம்யூனிஸ்ட்டுகள் பொறுப்பில் இருக்க வேண்டும் என்றும் கூறினார். “நந்தன் திரைப்படம் வெளியான போது என்னை முதலில் நேரில் அழைத்து பாராட்டியவர் அப்போதைய மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள். அவரின் அந்த பாராட்டு எனக்கு என்றைக்கும் மறக்க முடியாதது. கம்யூனிச தலைவர்கள் பாராட்டும் போது தான் நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்ற நம்பிக்கையே வருகிறது. சாதாரணமானவர்கள் கம்யூனிஸ்டுகள் என்றால் நானும் ஒரு கம்யூனிஸ்ட்தான்” என்று அவர் தனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டார்.
இறுதியாக உரையாற்றிய தமிழறிஞர் சாலமன் பாப்பையா, ஏழை மக்களுக்காக போராடும் கம்யூனிச இயக்கம் மேலும் வளர வேண்டும் என்ற தனது நீண்டகால விருப்பத்தை வெளிப்படுத்தினார். ஏழைகளின் வாழ்க்கையை வைத்தே ஒரு நாகரிகத்தின் தரத்தை அளவிட வேண்டும் என்றும், அதனை மார்க்சியவாதிகள் மட்டுமே சரியாக செய்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். மக்கள் விடுதலைக்கு கம்யூனிச, அம்பேத்கரிய மற்றும் பெரியாரிய இயக்கங்கள் ஒன்றிணைந்து செயல்படுவது மட்டுமே சரியான வழி என்றும் அவர் தனது கருத்தை ஆணித்தரமாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து, மறைந்த தோழர் சீதாராம் இச்சூரியனின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவர் ஆற்றிய மக்கள் பணிகள் ஆகியவற்றை நினைவு கூறும் வகையில் காம்ரேட் டாக்கிஸ் தயாரித்த “என்னும்” ஆவணப்படம் வெளியிடப்பட்டு திரையிடப்பட்டது. இது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
மாநாட்டின் முந்தைய நிகழ்வாக, பாரதி புத்தகாலயத்தின் “இருள் கிழித்த செஞ்சுடர்கள்” என்ற நூலை இயக்குனர் ராஜூமுருகன் வெளியிட, அதனை திரைக்கலைஞர் சசிகுமார் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வுகள் மாநாட்டிற்கு மேலும் சிறப்பு சேர்த்தன.