Mon. Mar 17th, 2025

1920ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், தாஷ்கண்ட் நகரத்தில் ஒரு சிறிய அறையில் ஏழு புரட்சியாளர்கள் ஒன்று கூடினர். அவர்கள் கண்களில் ஒரே ஒரு கனவு – இந்தியாவின் விடுதலையும், தொழிலாளர் வர்க்கத்தின் விமோசனமும். எம்.என்.ராய், அவரது துணைவியார் எவ்லின் டிரென்ட்ராய், அபனி முகர்ஜியும் அவரது மனைவி ரோஸா பிட்டிங்காப்பும், முகமது அலி, முகமது ஷாபி சித்திக் மற்றும் சென்னையின் புரட்சிக்கனல் எம்.பி.டி. ஆச்சார்யா – இவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் பாதையில் புரட்சியின் பயணத்தை மேற்கொண்டவர்கள்.

எம்.பி.டி. ஆச்சார்யாவின் கதை தனிச்சிறப்பு வாய்ந்தது. மகாகவி பாரதியின் நெருங்கிய தோழர் இவர். 1906 இல் ஆங்கிலேயரின் பிடியிலிருந்து பாரதியை மீட்டெடுக்க, ‘இந்தியா’ பத்திரிகை அச்சகத்தை இரவோடு இரவாக பாண்டிச்சேரிக்கு மாற்றிய வீரர். பின்னர் ஜெர்மனி சென்று, அங்கிருந்து லெனினின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, மார்க்சியத்தின் மாணவரானார். முகமது அலியும், முகமது ஷாபி சித்திக்கும் காபூலில் இருந்து செயல்பட்ட ராஜா மகேந்திர பிரதாப்பின் தற்காலிக அமைச்சரவையில் பணியாற்றியவர்கள். இப்படி ஒவ்வொருவரும் தனித்தனிப் பாதையில் பயணித்து, இறுதியில் ஒரே இலக்கில் சந்தித்தனர்.

அன்று எடுக்கப்பட்ட முதல் தீர்மானம் வரலாற்றின் திருப்புமுனையானது: “மூன்றாவது அகிலத்தின் கோட்பாடுகளை ஏற்று, இந்தியச் சூழலுக்கேற்ற வகையில் செயல்படுவோம்” என்ற உறுதிமொழியுடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை பிறந்தது. முகமது ஷாபி சித்திக் செயலாளராகவும், எம்.பி.டி. ஆச்சார்யா தலைவராகவும், எம்.என்.ராய் கூட்டச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நவம்பர் 17இல் துவக்க விழா கொண்டாடப்பட்டது. டிசம்பர் 15இல் நடந்த கூட்டத்தில் நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது. இவ்வாறு தாஷ்கண்டில் விதைக்கப்பட்ட புரட்சியின் விதைகள், இன்று வரை இந்திய மண்ணில் செந்தாரகையாய் ஒளிவீசிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு போராட்டத்திலும், ஒவ்வொரு எழுச்சியிலும், அந்த ஏழு தோழர்களின் கனவுகள் துடிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

By Admin

Related Post