Sat. Mar 15th, 2025

சிறப்பு கருத்தரங்கம்: தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாத்தபடியே தொழில் வளர்ச்சி – இதுவே கேரள மாடல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2 முதல் 6ஆம் தேதி வரை மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை முன்னிட்டு வியாழன் (மார்ச் 13) சென்னையில் “தொழில் முதலீடுகள் – தொழிலாளர் உரிமைகள்” எனும் தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து, கேரள மாநிலத் தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் பேசினார்.

“எனது மூச்சுக் காற்று கம்யூனிசம்” எனும் அண்மையில் நடைபெற்ற கேரள மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட “புதிய கேரளத்தை உருவாக்கப் புதிய பாதைகள்” எனும் தீர்மானத்தைக் குறிப்பிட்டு அமைச்சர் பி.ராஜீவ் பேசுகையில், “மார்க்சிஸ்டுகள் தங்களது கொள்கை வழியிலிருந்து விலகுகின்றனர் என்றெல்லாம் வழக்கம் போல் கதை கட்டிவிடுகின்றனர். ஆனால், இந்திய அரசியல் அமைப்புக்குள் நின்று சாத்தியமான வகையில் மாற்றுக் கொள்கையை நாம் முன்னெடுக்கிறோம்.

இதற்கான அடிப்படை உலகிலேயே தேர்தல் மூலம் முதன்முறையாக 1957இல் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, முதலமைச்சர் இஎம்எஸ் நம்பூதிரிபாட், ‘‘எனது மூச்சுக் காற்று கம்யூனிசம் தான். ஆனால் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்குள் தான் மக்களுக்கான பணிகளை நாங்கள் செய்யவேண்டும்” என்று வானொலியில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

அப்போதைய நிதி அமைச்சர் அச்சுத மேனன், தொழில் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகள் எங்கிருந்து வந்தாலும், அமெரிக்காவில் இருந்து வந்தாலும் கூட, கேரளா வரவேற்கும். ஆனால், நியாயமான கட்டுப்பாடுகளோடு தான் அந்த மூலதனம் ஏற்கப்படும் என்று குறிப்பிட்டார். அம்பானி, அதானி எல்லாம் வராத அந்த நாட்களில் டாடா, பிர்லா, சிங்கானியா போன்ற பெருந்தொழில் நிறுவனங்களின் சுரண்டலுக்கு எதிராகக் கம்யூனிஸ்டுகள் குரல் எழுப்புவது வழக்கம்.

இருந்தாலும், மேலே சொன்ன கட்டுப்பாடுகளின் அடிப்படையில் தொழில் தொடங்க கேரளத்திற்கு வருமாறு பிர்லா குழுமத்தையே அழைத்தார் முதலமைச்சர் நம்பூதிரிபாட். அப்படித்தான் கோழிக்கோட்டில் மாகூர் ரேயான் மில் உருவானது.

கேரளத்தின் தற்போதைய தொழில் கொள்கைகள்:

  1. முத்தரப்புக் கமிட்டிகள்: நிறுவன அளவில், மாவட்ட அளவில், மாநில அளவில் நிர்வாகப் பிரதிநிதிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அரசுத் தரப்பு என்று முத்தரப்பு முறை செயல்பாட்டில் இயங்குகிறது.
  2. தொழிலாளர் பணிக் கலாச்சாரம்: நோக்குக் கூலி என்ற பழைய முறைக்குப் பதிலாக, திறன் மேம்படுத்திக் கொண்டு பணியாற்றும் கலாச்சாரம் ஊக்குவிக்கப்படுகிறது.
  3. உற்பத்தியோடு இணைந்த ஊக்கத்தொகை: லாபத்தில் பங்கு என்கிற வகையில் ஊதியம் உறுதிசெய்யப்படுவதுடன், உற்பத்தியோடு இணைந்த ஊக்கத்தொகை, போனஸ் வழங்கவும் வகை செய்யப்பட்டிருக்கிறது.

சிறு குறு நடுத்தரத் தொழில் வளர்ச்சி:

அதே போன்று மூன்றரை லட்சம் சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அண்மைக்காலத்தில் புதிதாக உருவாகியுள்ளன. தொழில் தொடங்க 4 சதவீத வட்டியில் கடனுதவியும் வழங்கப்படுகிறது. புதிய தொழில் முனைவோரில் 31 சதவீதம் பெண்கள் ஆவர். கேரள மாநிலம் முழுவதும் 7.5 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன.

குறிப்பாக, உற்பத்திப் பொருள்களைச் சந்தைப்படுத்த அரசே கடைகளைத் திறந்து, ‘கேஷாப்பி’ எனும் ஆன்லைன் வர்த்தகத் தளமும் உருவாக்கப்பட்டுள்ளது. சிறு நிறுவனங்களுக்குக் காப்பீடு செய்து பிரீமியத் தொகையில் 50 சதவீதம் அரசே ஏற்கிறது. தொழில் நெருக்கடிக்கு உடனடித் தீர்வு காண ‘கிளினிக்குகள்’ ஏற்படுத்தப்பட்டு, நிபுணர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்” எனக் கூறினார்.

தொழிற்சங்கங்கள் வளர்ச்சிக்குத் தடையா?

தொழில் முதலீடுகளுக்கும் தொழிலாளர் உரிமைகளுக்கும் மோதல் என்பது கட்டுக்கதை என்று திட்டவட்டமாக மறுத்த அமைச்சர் ராஜீவ், அதனைப் புள்ளிவிவரங்களுடன் விளக்கினார். அதில், “2008-2018 பத்தாண்டுகளில் தமிழகத்தில் வேலைநிறுத்தம் 26 சதவீதம். ஆனால், அதே காலத்தில் புதிய முதலீடுகள் 16 சதவீதம் வந்துள்ளது. இதே பத்தாண்டுகளில் வேலைநிறுத்தம் 17 சதவீதம் நடைபெற்ற மகாராஷ்டிராவிலும், 11 சதவீதம் நடைபெற்ற குஜராத்திலும் முதலீடுகள் பாதிக்கப்படவில்லை.

ஆனால், கேரளத்தில் நிரந்தரத் தொழிலாளர்கள் 46 சதவீதம் (தேசிய சராசரி 25%), பெண் தொழிலாளர்களில் 51 சதவீதம் நிரந்தரத் தொழிலாளர்கள். அறிவுசார் துறை வளர்ச்சி ஐடி துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மன உளைச்சல்களிலிருந்து மீள உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. தொழிலதிபர்களை அழைப்பதற்கு முன்பாகவே தொழிற்சங்கப் பிரதிநிதிகளை அழைத்து, அவர்களது கோரிக்கைகளை முன்னதாகவே கேட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தற்போதைய சவால்கள் அதிகரித்துள்ள நிலையில், ஒன்றிய அரசின் பாரபட்சம், தானியங்கி மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றை எதிர்கொண்டும், தொழிலாளர் உரிமைகளில் எந்தச் சமரசமும் செய்யாமல் தொழில் வளர்ச்சியைக் கேரளம் முன்னெடுத்து வருகிறது. தொழிலாளர் உரிமைகளில் கிஞ்சிற்றும் சமரசம் செய்யாமல் தொழில் முதலீடுகள் சாத்தியம், தொழில் வளர்ச்சியும் சாத்தியம் என்பதைக் கேரளம் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது” என அமைச்சர் ராஜீவ் தெளிவாக எடுத்துரைத்தார்.

By Admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *