Fri. Mar 14th, 2025

பெரு நிறுவனங்களுக்கு சலுகை, விவசாயிகளுக்கு சுமை – பெ.சண்முகம்

உடுமலையில் நகராட்சி அலுவலகம் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24 ஆவது மாநாட்டு சிறப்பு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர். மதுசூதனன் தலைமை வகித்தார்.

விவசாய நெருக்கடியும், தீர்வும் என்ற தலைப்பில் பேசிய மாநில செயலாளர் பெ. சண்முகம் கூறியதாவது: “உழவும் – தொழிலும் சிறப்பாக இருந்தால் மட்டுமே நாடு வளர்ச்சி அடையும். ஆனால் மக்கள் விரோத ஒன்றிய பிஜேபி அரசு சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டும் சலுகைகளை தாரளமாக தருவதாலும், விவசாய விளைபொருள்களுக்கு லாபகரமான விலை இல்லாத காரணத்தாலும் உழவனும் – சிறு குறு தொழில்களும் முற்றிலும் அழிவு நிலைக்கு சென்றுள்ளன.

விவசாயிகளின் விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை ஒன்றிய அரசு நிர்ணயம் செய்து சட்டம் இயற்ற வேண்டும். மோடி அரசை மண்டியிட வைத்த விவசாயிகளின் போராட்டத்தின் முடிவில் விவசாயிகளிடம் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி அனைத்தையும் இன்றுவரை அமல்படுத்த மறுக்கும் நடவடிக்கை விவசாயத்தை ஆழப் பாதாளத்தில் கொண்டு சென்றுள்ளது.

உடனடியாக ஒன்றிய அரசு 23 வகையான விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். நாடு முழுவதும் விளைபொருட்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். அனைவருக்கும் சட்டப் பாதுகாப்பும், சந்தை உத்தரவாதமும், லாபகரமான விலையும் கிடைக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும்” என்றார்.

மேலும், “இன்றைய நடைமுறை வாழ்க்கையில் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்ய மக்கள் அரசு வங்கிகளில் நகைகளை வைத்து கடன் பெறுவது அதிகமாக உள்ளது. இதன்படி அரசு வங்கிகளில் மட்டும் சுமார் 4 முக்கால் லட்சம் கோடி ரூபாய் மதிப்பு நகைகளை வாழ்க்கையை நடத்த மக்கள் அடமானம் வைத்துள்ளார்கள்.

இது போன்ற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தாமல் ஒன்றிய அரசு பெரும் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மட்டுமே உதவும் வகையில் கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 25 லட்சம் கோடி ரூபாய் பெரும் நிறுவனங்களின் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது.

ஆனால் ஒரே முறை மட்டும் அனைத்து விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய மோடி அரசின் நிதி அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் மற்றும் ஒன்றிய அரசு கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

மோடி அரசின் வரி விதிப்பு குறித்து எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், அரிசியைப் பையில் விற்றால் வரி, அந்த அரிசி மாவாக அரைத்தால் வரி, பின்னர் மாவை வைத்து உணவுப் பொருளாகச் செய்தால் அதற்கு வரி – இப்படி ஒரு பொருள் மீது பலவகையில் வரி, பின்னர் வரிக்கு வரி என்று பொதுமக்களின் மீது வரியைத் திணிக்கும் மோடி அரசை இந்த மாவட்ட மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

மேலும் நாட்டில் இருக்கும் பெரும் நிறுவனங்களுக்கு விளைநிலங்கள் இல்லை. ஆனால் அதிக விவசாய நிலங்கள் பொது மக்களிடம்தான் உள்ளது. இந்த அமைப்பைச் சீர்குலைக்கும் வகையில்தான் விளைநிலங்கள் மதிப்பில் உயர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். விவசாயிகள் விளைநிலங்களை விற்பனை செய்து வருகிறார்கள். இப்படி விற்பனையாகும் நிலங்கள் விவசாயப் பயன்பாட்டிற்கு இல்லாமல் வேறு பயன்பாட்டிற்குச் செல்கின்றன. இதனால் வரும் காலங்களில் விவசாயம் இல்லாமல் போகும் நிலை ஏற்படும். பின்னர் உணவுப் பொருள்களுக்குப் பெரும் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும். இதனால் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படும்.

இவற்றைத் தடுக்க ஒன்றிய அரசு விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை நிர்ணயம் செய்யவேண்டும்.

மேலும் விவசாயிகளுக்குத் தற்பொழுது புதிய பிரச்சனையாக வனவிலங்குகளால் விளைநிலங்கள் அதிகமாகச் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்படி சுமார் ஆயிரம் கோடி மதிப்புள்ள விளைபொருட்களை வனவிலங்குகள் சேதப்படுத்தியுள்ளன. இவற்றைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு வேகமான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரக வேலை திட்டத்தை விவசாய வேலைகளுக்குப் பயன்படுத்த வேண்டும். பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

வன உரிமைச் சட்டம் 2006ன் படி மலை மக்களுக்குச் சொந்தம் என்பதை மீறும் செயலாக உள்ளது. தமிழக அரசு உடனடியாக மலைவாழ் மக்களுக்குப் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோல் தமிழக மக்களைத் தொடர்ச்சியாக வஞ்சிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து கடிதம் மட்டுமே எழுதுவதால் எந்த மாற்றத்தையும் ஒன்றிய அரசு செய்யாது. ஒன்றிய அரசின் தமிழக மக்கள் விரோதச் செயலை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும்” என்றார்.

திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே. காமராஜ், மாவட்டச் செயலாளர் சி. மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரங்கராஜ், கனகராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் கனகராஜ், பஞ்சலிங்கம், உடுமலை நகர செயலாளர் தண்டபாணி, மடத்துக்குளம் தாலூக்கா செயலாளர் ஆர்.வி. வடிவேல், ஒன்றியச் செயலாளர்கள் ஜெகதீசன், சசிகலா மற்றும் மலைக்கமிட்டி செயலாளர் செல்வன், தாராபுரம் தாலூக்கா செயலாளர் ஆர். வெங்கட்ராமன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

By Admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *