1922 டிசம்பர், பீகாரின் புனித நகரமான கயாவில் காங்கிரஸ் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்றைய நாள், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையப் போவதை யாரும் அறிந்திருக்கவில்லை. மாநாட்டின் பிரதான அரங்கில் தோழர் ம.சிங்காரவேலர் எழுந்தார். அவர் முதன்முதலாக சந்தித்த எஸ்.ஏ.டாங்கேயுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் அவருக்கு புதிய உத்வேகத்தை அளித்திருந்தது.
வழக்கமான காங்கிரஸ் பிரமுகர்களின் “கனதனவான்களே” என்ற விளிப்பை மாற்றி, அவர் தொடங்கிய விதம் அரங்கையே அதிர வைத்தது. “தோழர்களே! உடன் உழைக்கும் தொழிலாளர்களே! இந்துஸ்தானத்து விவசாயிகளே!” – அவரது குரலில் இருந்த உறுதி அரங்கில் இருந்த ஒவ்வொருவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. உலகின் கம்யூனிஸ்ட் இயக்கங்களின் பிரதிநிதியாக, சோவியத் ரஷ்யா, ஜெர்மனி மற்றும் பிற நாடுகளின் கம்யூனிஸ்டுகளின் வாழ்த்துச் செய்தியை அவர் கொண்டு வந்திருந்தார்.
முதலாளித்துவ வர்க்கத்திற்கு அவர் விடுத்த எச்சரிக்கை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டியது: “ஏ! பணக்காரர்களே, எச்சரிக்கையாக இருங்கள். உலகின் செல்வங்கள் அனைத்தையும் உருவாக்கிய தொழிலாளியை மூலையில் தள்ளி வைத்துள்ளீர்கள். ஆனால் இன்று அந்தத் தொழிலாளி விழித்துக் கொண்டார்!” அவரது பேச்சின் ஒவ்வொரு வார்த்தையும் தொழிலாளர்களின் உரிமைக்காக ஒலித்தது. அவர் வலியுறுத்திய கோரிக்கைகள் தெளிவாக இருந்தன – அனைவருக்கும் உணவு, உடை, வீடு; அதிகார குவிப்பைத் தடுத்தல்; வன்முறையற்ற ஒத்துழையாமை மூலம் சுயராஜ்யம். காங்கிரஸில் தொழிலாளர்களுக்கான இடம் வேண்டும் என்ற அவரது கோரிக்கை, தேசிய அளவிலான வேலைநிறுத்தத்திற்கான அழைப்பு – இவை அனைத்தும் மாநாட்டு பிரதிநிதிகளின் கரகோஷத்தைப் பெற்றன. மாநாட்டின் முடிவில், தொழிலாளர் துணைக்குழுவில் சிங்காரவேலர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சி.எப்.ஆண்ட்ரூஸ், ஜே.எம்.சென்குப்தா, எஸ்.என்.ஹல்தார், ஸ்வாமி தயானந்த், டாக்டர் டி.டி.சத்தாயா ஆகியோருடன் இணைந்து அவரும் குழுவில் இடம்பெற்றார்.
சிறப்பான பதிவுகள்.
நினைவுகள் அழிவதில்லை.
வாழ்த்துக்கள்