Fri. Mar 14th, 2025

சிறப்பு கருத்தரங்கம்: நில உரிமைப் போராட்டக் களத்தில் சி.பி.ஐ(எம்)

சி.பி.ஐ(எம்) அகில இந்திய 24ஆவது மாநாட்டை ஒட்டி, திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை ‘நில உரிமைக்கான மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் சி.பி.ஐ(எம்) மத்தியக் குழு உறுப்பினர் விஜு கிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது:

“உழுபவனுக்கு நிலம்” என்கிற கோரிக்கையை விடுதலைப் போராட்டக் காலத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சி எழுப்பியது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1930களில் இருந்து இதற்கான போராட்டங்கள் நடந்து வருகின்றன. மிருகங்கள் பெயரில் எழுதிவைக்கப்பட்ட நிலங்கள் நாடு விடுதலை அடைந்த பிறகும், நிலத்திற்கான மிகப்பெரிய போராட்டங்கள் தமிழ்நாடு, கேரளம், அசாம், பஞ்சாப் என நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடந்தன. இதனால், ஆளும் வர்க்கம் ‘நிலச் சீர்திருத்தம்’ என்கிற பெயரில் சட்டப்பூர்வ நில உச்சவரம்பை கொண்டு வந்தது. ஆனால், ஐந்தாண்டு திட்டங்களின் வாயிலாக என்ன நடந்தது என்று பார்த்தால், நிலப்பிரபுக்களுக்கு 1950களில் 690 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டது. பல்வேறு இடங்களில் நில உடமையாளர்கள் தங்களது வளர்ப்பு மிருகங்கள் பெயரில் நிலங்களை எழுதி வைத்தனர்.

நிலத்துக்கான தொடர் போராட்டம் நடந்து வந்த பின்னணியில் கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தது. 1957இல் இஎம்எஸ் நம்பூதிரிபாட் தலைமையிலான அரசு பொறுப்புக்கு வந்த நான்காவது நாள், கேரளம் முழுவதும் விவசாயத் தொழிலாளர்களையும் குத்தகைதாரர்களையும் நிலவெளியேற்றம் செய்வதைத் தடை செய்தது. அதன் தொடர்ச்சியாக, உபரி நிலங்களை அவர்களுக்குச் சொந்தமாக்கியது. அதன் மூலம் 35 லட்சம் மக்களுக்கு சொந்தமாக நிலம் கிடைத்தது. ஜம்மு-காஷ்மீரில் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டு, நில உச்சவரம்பு 22 ஏக்கர் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. அதன் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு நில விநியோகம் செய்யப்பட்டது.

இந்தியாவின் புகழ்பெற்ற பொருளாதார புள்ளியியல் அறிஞர் பி.சி. மகலானோபிஸ், இந்தியாவில் 6 கோடி ஏக்கர் உபரி நிலம் விநியோகிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், ஜம்மு-காஷ்மீர் தவிர, கேரளம், மேற்கு வங்கம், திரிபுராவில் இடதுசாரி அரசுகள் மட்டுமே நில விநியோகம் செய்தன. இதில் மேற்கு வங்க அரசு மட்டும் நாட்டின் ஒட்டுமொத்த நில விநியோகத்தில் 50 சதவீதத்தை மேற்கொண்டது. நில உரிமை பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் தலித், பழங்குடி மற்றும் ஏழைகளாவர். ஒடிசாவில் 75 லட்சம் ஏக்கர் உபரி நிலம் இருப்பது தெரியவந்துள்ளது. அங்கு 36 லட்சம் நிலமற்றவர்கள் உள்ளனர். நில விநியோகச் சட்டத்தை நீர்த்துப்போக வைக்கும் செயல் பீகாரில் 23 லட்சம் ஏக்கர் உபரி நிலம் இருப்பதையும், நிலமற்றோருக்கு தலா ஒன்றே முக்கால் ஏக்கர் நிலம் விநியோகத்திற்குத் தயாராக இருப்பதாகவும் பந்தோபாத்யாயா கமிஷன் கண்டறிந்தது. ஆனால் நில விநியோகம் நடக்கவில்லை.

கர்நாடகாவில் லட்சக்கணக்கான ஏக்கர் அரசுப் புறம்போக்கு நிலங்களில் பல தலைமுறைகளாக விவசாயம் செய்வோருக்கு பட்டா வழங்கப்படவில்லை. ஆந்திரா, தெலுங்கானாவில் கோனேரி ரங்காராவ் கமிஷன் லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் உபரியாக உள்ளதைக் கண்டறிந்தது. ஆனால், ஏழைகளுக்கு நிலம் கொடுப்பதற்குப் பதிலாக, நில விநியோகச் சட்டத்தை நீர்த்துப்போக வைக்கும் செயலையே முதலாளித்துவ கட்சிகள் செய்து வருகின்றன. இடதுசாரி அரசுகள் மட்டுமே நில விநியோகம் செய்துள்ளன.

நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கோயில்களுக்கும் மடங்களுக்கும் சொந்தமாக உள்ளன. தமிழ்நாட்டில் 4.78 லட்சம் ஏக்கர் உட்பட, ஆந்திரா, தெலுங்கானாவில் சுமார் பத்து லட்சம் ஏக்கர் நிலங்கள் கோயில்களுக்குச் சொந்தமாக உள்ளன. பூரி ஜெகநாதர் ஆலயத்துக்கு 61 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. இப்படி நாடு முழுவதும் ஆலயங்களுக்குச் சொந்தமான சுமார் ஒரு கோடி ஏக்கர் நிலம் உள்ளதாக மதிப்பீடு செய்யலாம். இதுபோல், இந்தியா முழுவதும் வக்பு வாரியத்துக்குச் சொந்தமாக 9.4 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. இப்படி பல்வேறு மதங்களுக்கும் சொந்தமான லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. விநியோகத்துக்கான நிலங்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றை உறுதிப்படுத்தும் போராட்டங்களை நாம் தீவிரப்படுத்த வேண்டும்.

By Admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *