Sat. Mar 15th, 2025

மதுரையில் கூடும் மார்க்சிய திருவிழா – பெ.சண்முகம் பேச்சு !

மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாட்டையொட்டி கரூரில் நடைபெற்ற கருத்தரங்கில் மாநில செயலாளர் பெ.சண்முகம் சிறப்புரையாற்றினார். அவரது உரையின் பகுதிகள்:

உழைப்பாளர்களின் நிதியுடன் 24ஆவது அகில இந்திய மாநாடு

மார்க்சிஸ்ட் கட்சி உழைப்பாளர்களுக்காகப் போராடுகிறது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் 15 நாட்களுக்கு மேலாகத் தமிழகம் முழுவதும் நிதி திரட்டியுள்ளனர். இந்த நிதியை மாநாட்டில் சிக்கனமாகச் செலவு செய்வோம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொள்வர்.

மதுரையில் ‘மார்க்சிஸ்ட் திருவிழா’

ஏப். 6 அன்று நடைபெறும் பேரணியில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்வர். மதுரையில் ‘மார்க்சிஸ்ட் திருவிழா’ என்று சொல்லும் அளவிற்குப் பிரம்மாண்டமாக மாநாட்டை நடத்துவோம். இதன்மூலம் மக்கள் மனதில் தன்னம்பிக்கையை உருவாக்க முடியும்.

மக்கள் போராட்டங்களில் முன்னணி

மார்க்சிஸ்ட் கட்சி ஒரு சாதாரணக் கட்சி அல்ல. மக்களின் அனைத்துப் பிரச்சனைகளிலும் கம்யூனிஸ்ட் கட்சி தலையிடுகிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட “பிரச்சனை இருந்தால் கம்யூனிஸ்ட் கட்சியிடம் சொல்லுங்கள்” என்று கூறுகின்றனர். மக்களுக்காக உயிரையும் தியாகம் செய்யக்கூடிய ஓர் இயக்கம் என்ற அங்கீகாரம் பெற்றுள்ளோம்.

வீட்டுவசதி – கேரளா முன்மாதிரி

ஏழை, எளிய மக்களின் அடிப்படைத் தேவைகளைத் தீர்ப்பது அரசின் கடமை. ஒரு கௌரவமான வாழ்க்கைக்கு வீடு அவசியம். கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியில் 96% குடும்பங்களுக்கு அரசு வீடு கட்டித் தந்துள்ளது. கேரளாவால் முடியும் என்றால் தமிழகத்தாலும் முடியும். செயல்படுத்த அரசிடம் கொள்கை முடிவு வேண்டும்.

அரசுப் பள்ளிகளைக் காப்போம்!

தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகரித்து, அரசுப் பள்ளிகள் மூடப்படுகின்றன. அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்பது நமது கடமை.

சாதி வெறித் தாக்குதல்களை எதிர்ப்போம்!

சீனா, கியூபா போன்ற நாடுகள் வறுமையின்றி இருக்க, இந்தியாவில் வறுமை நீடிப்பது ஏன்? இதற்கெதிராகத்தான் மார்க்சிஸ்ட் கட்சி போராடுகிறது. சாதி, மதப் பேதங்களால் மக்கள் பிளவுபடுத்தப்படுகின்றனர். ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவா அமைப்புகள் வெறுப்பு அரசியலைச் செய்கின்றன. ஸ்ரீவைகுண்டத்தில் பட்டியலின மாணவர் மீது நடந்த கொடூரத் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. கபாடி போட்டியில் வென்றதற்காக அவரின் கை விரல்கள் வெட்டப்பட்டுள்ளன. 16 வயது மாணவர்கள் இத்தாக்குதலில் ஈடுபட்டது பள்ளிகளில் சாதிய வன்மம் ஆழமாக ஊடுருவியுள்ளதைக் காட்டுகிறது.

நீதிபதி சந்துரு அறிக்கையை நடைமுறைப்படுத்துங்கள்

தமிழக அரசு சாதி வெறிக்கு எதிராக விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்த வேண்டும். நீதிபதி சந்துரு ஆணையத்தின் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். சாதிய கொடுமைகள் நடந்த பிறகே அரசு செயல்படுவது ஏன்?

பாதிக்கப்பட்ட மாணவருக்கு உயர்தர சிகிச்சை

சாதிய வன்முறைகளுக்கு எதிராக நூற்றாண்டுகளாக மார்க்சிஸ்ட் கட்சி போராடுகிறது. எங்கள் தோழர்கள் பலர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். மற்ற கட்சிகள் வாக்குக்காக இப்பிரச்சனைகளைப் புறக்கணிக்கின்றன. ஸ்ரீவைகுண்டம் தாக்குதலில் காயமடைந்த தேவந்திரராஜ் உயர்தர சிகிச்சை பெற வேண்டும். அவரது ஏழைப் பெற்றோருக்கு உதவி செய்ய வேண்டும். அவரது கை விரல்களை மீண்டும் பயன்படுத்தும் வகையில் சிகிச்சை அளிக்க வேண்டும்.

பெயரை நீக்குங்கள்

பள்ளிகளில் சாதிப் பெயர்களை நீக்க வேண்டும். உயர் நீதிமன்றம் இதுகுறித்துக் கருத்துக் கேட்பதில் அர்த்தமில்லை. ஆனால் கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்ற உத்தரவிட்டுள்ளனர். சாதி ஒழிப்புக்கான போராட்டத்தைத் தீவிரமாக நடத்த வேண்டும்.

தமிழக உரிமைகளை மதியுங்கள்

ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழகத்தை அவமதித்துள்ளார். அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும். தமிழகத்திற்கான நிதியை உடனடியாக வழங்க வேண்டும். கல்வி, வேலையின்மை, வறுமை, விலைவாசி உயர்வுப் பிரச்சனைகளை மாநாட்டில் விவாதிப்போம்” என உரையாற்றினார்.

By Admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *