Fri. Mar 14th, 2025

தொழில்களையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றும் சி.பி.ஐ(எம்) !

சி.பி.ஐ(எம்) 24வது அகில இந்திய மாநாட்டை ஒட்டி, சிறப்பு கருத்தரங்கம் திருப்பூரில், மருதாசலபுரம் பகுதியில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் சிறு குறு தொழில்கள், தொழிலாளர் நலன் மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகம் காப்பதில் மக்களுக்கு முன் உள்ள சவால்கள் விவாதிக்கப்பட்டன.

கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்தில், சிறு, குறு தொழில் பாதுகாப்பு, தொழிலாளர்கள் நலனில் கம்யூனிஸ்டுகள் பங்கு என்ற தலைப்பில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் பேசினார். அவர் கூறியதாவது, சிறு குறு நடுத்தர தொழில் என்பது நாட்டின் முதுகெலும்பு. சிறு குறு தொழில்கள் தமிழ்நாட்டில் உள்நாட்டு உற்பத்தியில், ஏற்றுமதியில் 1 கோடியே 40 லட்சம் பேர் பணியாற்றுகிறார்கள். இந்திய அளவில் 20 கோடி பேர் பணியாற்றுகிறார்கள். பெரிய தொழிற்சாலைகளில் குறிப்பிட்ட படிப்பை படித்தவர்களுக்கு தான் வேலை வழங்குவார்கள்.

ஆனால் கிராமப்புற பகுதிகளில் 10, 12 ஆம் வகுப்பு, ஐஐடி உள்ளிட்டவைகளை படித்த, படிக்காத லட்சக்கணக்கான கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை கற்று கொடுத்து, வேலை வழங்குவது சிறு, குறு தொழில்கள்தான். ஒன்றிய அரசு கடைபிடிக்கும் தவறான பொருளாதார கொள்கைகளால் சிறு, குறு தொழில்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. கொரோனா காலக்கட்டத்தில் 6 கோடியே 30 லட்சம் சிறு, குறு தொழிகள் உள்ளதாகவும், கடந்த செப். மாத கணக்கெடுப்பின்படி 60 லட்சம் தொழில்கள் குறைந்து, தற்போது 5.70 லட்சம் சிறு, குறு தொழில்கள் உள்ளதாக கூறுகின்றனர். ஒன்றிய அரசு கவனம் செலுத்தாதது தான் இதற்கு காரணம்.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் சிறு, குறு தொழில்கள் ரூ.5 கோடி கடன் பெற முடியும் என்பதை ரூ.10 கோடியாக மாற்றி அறிவித்துள்ளனர். மேலும், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி சிறு, குறு தொழில்களுக்கு கடன் கொடுக்க போவதாக தெரிவித்துள்ளனர். ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி அதிகபட்சம் 3 ஆயிரம் பேருக்கு என்றால், 5 ஆண்டுகளுக்கு 15 ஆயிரம் பேருக்கு மட்டுமே கடன் தர முடியும். இது யானை பசிக்கு சோளப் பொறி போல.

5 லட்சத்து 70 ஆயிரம் சிறு குறு தொழில்களுக்கு 5 ஆண்டுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி கடன் தருவதாக சொல்லி இருக்கும் மத்திய அரசு, சென்ற ஆண்டு விரல் விட்டு எண்ண கூடிய தொழில் அதிபர்கள் வாங்கிய கடன் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடியை திரும்ப கட்ட முடியவில்லை என தள்ளுபடி செய்துள்ளது. ‘’நிர்மலா சீதாராமனை சந்திக்க மூன்று முறை திருப்பூர், கோவையை சார்ந்த சிறு, குறு தொழில் முனைவோர் சென்றனர். மூன்றாம் முறை அவர்கள் சென்றபோது, ஏன் எப்போதும் பிச்சை பாத்திரத்தை ஏந்தி வருகிறீர்கள்? என கேட்டவர்தான் நிர்மலா சீத்தாராமன். ‘’
சிறு குறு தொழில்களை பாதுகாப்பதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாற்றுதிட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசிடம் 4 அம்ச கோரிக்கைகளை முன் வைத்தது. அதில், அரசு ஊழியர்கள் கோரிக்கை, போக்குவரத்து ஊழியர்களின் அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கைகள். அத்துடன் சிறு, குறு தொழில்களுக்கு மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பது. வசதி வாய்ப்பு இல்லாதா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை தரக்கூடிய சிறு குறு தொழில்களை பாதுகாப்பது அரசின் கடமை. கங்கை கொண்டான் பகுதியில் டாட்டா பவர் பிளாண்ட் அமைக்க உள்ளது. அந்த நிறுவனத்திற்கு இடம், மின்சாரம் உள்ளிட்டவைகள் சலுகையில் கிடைக்கிறது. அதேபோல் பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்டவைகளால் கடும் நெருக்கடியை சந்தித்துள்ள சிறு குறு தொழில்களுக்கு இடம் இலவசமாக கொடுக்க வேண்டும். இடு பொருட்களை மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று கே.கனகராஜ் கூறினார்.

இந்திய அரசியல் அமைப்பும், நாடாளுமன்ற ஜனநாயகமும் என்ற தலைப்பில் கட்சியின் மாநிலசெயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் பேசினார்.

ஆர்எஸ்எஸ் இயக்கமும் நூற்றாண்டு கண்டுவிட்டது. கம்யூனிஸ்ட் இயக்கமும் நூற்றாண்டை கடந்து விட்டது. ஆனால் ஆர்எஸ்எஸ் இயக்கும் பாஜக ஆட்சிக்கு வந்து விட்டது, கம்யூனிஸ்டுகள் இன்னும் ஆட்சிக்கு வர முடியவில்லையே என்று சிலர் கேட்கின்றனர். பால் குடித்தால் உடனே உடம்பு பலம் பெறாது, ஆனால் பாலிடாயில் விஷம் குடித்தால் உடனடியாக வாயில் நுரைதள்ளும். மரணம் நிச்சயம். அதுபோலத்தான் கம்யூன்ஸ்ட் இயக்கம் பால் போன்றது. அது நாட்டுக்கு நன்மை செய்யும். தாமதமானாலும் நாட்டில் நிச்சயம் மாற்றம் ஏற்படுத்தும். ஆர்எஸ்எஸ் இயக்கம் பாலிடாயில் விஷம் போன்றது, நாட்டுக்கு அழிவை ஏற்படுத்தக் கூடியது.
இந்த நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகத்தை, அரசியல் சட்டத்தை சிதைக்கும் வேலையை பாஜக செய்கிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம் என்று மிரட்டுகிறார்கள். இந்தி கற்றால் வட மாநிலத்தில் வேலை செய்யலாம் என்கின்றனர். இந்தி பேசும் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்திற்கு வந்து நன்றாக தமிழ் பேசி பானி பூரி விற்றுக் கொண்டிருக்கிறார்கள். பாஜகவுக்கு என்ன பிரச்சனை? யாரையும் நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள். உலகம் முழுவதும் வலதுசாரிகள் ஒரே மாதிரிதான் செயல்படுகிறார்கள். இவர்களை முறியடிக்க மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டு தொன்மையான நகரமான மாமதுரை நகரத்தில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்க அனைவரும் குடும்பமாக வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த கருத்தரங்கத்தில் கட்சியின் அகில இந்திய மாநாட்டு நிதியாக மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் திரட்டப்பட்ட ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஆர்.மணிமேகலை தனது ஒரு மாத ஊதியம் ரூ.10 ஆயிரத்தை அகில இந்திய மாநாட்டு நிதியாக மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜிடம் வழங்கினார்.
இக்கூட்டத்தில், முன்னதாக வடக்கு மாநகரச் செயலாளர் பா.சௌந்தராசன் வரவேற்றார். இதில், மாநில செயற்குழு உறுப்பினர் முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ரங்கராஜ், ஆர்.குமார், மாவட்டக்குழு உறுப்பினர் சி.பானுமதி மற்றும் இடை கமிட்டி செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The first of a series of seminars ahead of the CPIM XXIV Party Congress has begun in TamilNadu. The first seminar was held in Tiruppur on March 5. State Secretariat Members Comrade Mathukkur Ramalingam and Comrade K Kanagaraj spoke on the topics ‘Constitution of India and Parliamentary Democracy’ and the ‘Role of Communist Party in the Welfare of Workers and MSMEs’, respectively.

State Secretariat Member Comrade S Muthukannan and Tiruppur District Secretary Comrade Moorthy were present.

By Admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *