Sat. Mar 15th, 2025

1918 முதல் உலகப்போர் முடிவில் ரயில்வே தொழிலாளர் போராட்டம்

தொழிலாளர் போரில் ஒரு தியாக சரிதம்

முதல் உலகப்போரின் முடிவில் (1918), ஆங்கிலேய ஆட்சி இந்திய ரயில்வே தொழிலாளர்களை நசுக்கத் திட்டமிட்டது. வங்காள-நாக்பூர் ரயில்வேயில் பணிபுரிந்த 21,000 தொழிலாளர்களில், காரக்பூர் பணிமனையின் 10,000 தமிழ், தெலுங்கு தொழிலாளர்கள் முதல் கட்டமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

தொழிலாளர்களின் குரலாக ம.சிங்காரவேலர், வி.ஆர்.காளப்பா, முகுந்தலால் சர்க்கார் ஆகியோர் களத்தில் குதித்தனர். முன்னதாகவே சிங்காரவேலர், முகுந்தலால் சர்க்காருடன் தொடர்பில் இருந்தார். லில்லுவா, காரக்பூரில் அவர்கள் தீவிர போராட்டத்தை முன்னெடுத்தனர். அடுத்து தென்னிந்திய ரயில்வேயில் புயல் வீசியது. பொன்மலை, நாகப்பட்டினம், போத்தனூர், திருச்சி பணிமனைகளை மூடி, 3,200 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ய நிர்வாகம் முடிவெடுத்தது. தொழிலாளர்களை கட்டாய ஓய்வு பெறவும், தொழில்திறன் தேர்வு எழுதவும் நிர்பந்தித்தது. டி.கிருஷ்ணசாமி பிள்ளை தலைமையில், சிங்காரவேலர், முகுந்தலால் சர்க்கார் உள்ளிட்டோர் வேலைநிறுத்தக் குழுவை உருவாக்கினர். ஆட்குறைப்பு மற்றும் திறன் தேர்வு உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும் என்று கோரினர். நிர்வாகம் மறுத்ததால், 1928 ஜூலை 19 நள்ளிரவில் வேலைநிறுத்தம் தொடங்கியது.

தூத்துக்குடி, விழுப்புரத்தில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. தஞ்சாவூரிலிருந்து திருச்சி செல்லும் வழியில் சிங்காரவேலரும் முகுந்தலால் சர்க்காரும் கைது செய்யப்பட்டனர். தொழிற்சங்க அலுவலகமும், தொழிலாளர் பத்திரிகை அலுவலகமும் காவல்துறையால் கைப்பற்றப்பட்டன. சென்னையிலும் திருச்சியிலும் பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்கள் எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினர். திருச்சி சதி வழக்கில் ஜூரிகள், 18 பேரில் நால்வரை மட்டுமே குற்றவாளிகள் என்றனர். ஆனால் நீதிபதி லட்சுமண ராவ் 15 பேரை குற்றவாளிகளாக அறிவித்து, சிங்காரவேலர், கிருஷ்ணசாமி பிள்ளை, முகுந்தலால் சர்க்கார் உள்ளிட்ட 14 பேருக்கு பத்தாண்டு சிறைத் தண்டனையும், தொழிலாளி பெருமாளுக்கு அந்தமான் ஆயுள் தண்டனையும் விதித்தார்.

மேல்முறையீட்டில் பலருக்கும் தண்டனை இரண்டாண்டுகளாகக் குறைக்கப்பட்டது. பெருமாள் 1937-இல் ராஜாஜி ஆட்சியில்தான் விடுதலையானார். 71 வயது சிங்காரவேலர் சிறை முடிந்து வெளியே வந்தபோது பக்கவாதம் தாக்கியிருந்தது. உடல் தளர்ந்திருந்தாலும், அவரது சிந்தனை மக்களையே நாடியது.

By Admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *