அதிதீவிர வலதுசாரி சக்திகளுக்கு எதிரான போராட்டத்தின் முக்கிய மைல்கல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநாடு என்று ஏ.விஜயராகவன் கூறினார். இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்டு சிறப்புக் கருத்தரங்கில், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஏ.விஜயராகவன் உரையாற்றினார். அவர் தனது உரையில், “ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரையில் நடைபெறும் அகில இந்திய மாநாடு, வலதுசாரி சக்திகளுக்கு எதிரான போராட்டத்தின் முக்கிய அடையாளமாக அமையும்” என்றார். தமிழகத்தில், குறிப்பாக மதுரையில் இதுவரை மூன்று அகில இந்திய மாநாடுகள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது என்றும் கூறினார்.
முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு எதிரான குரல்
“இந்தியாவில் வெறும் 5 பெரும் முதலாளிகளிடம் – அம்பானி, அதானி போன்றவர்களிடம் – 20% சொத்துக்கள் குவிந்துள்ளன. பொது நிறுவனங்களையும் இவர்களிடம் ஒப்படைத்து வருகிறது அரசு. நாம் எத்தனை கட்டமைப்புகளை உருவாக்கினாலும், அதன் லாபம் முதலாளிகளுக்கே போகிறது. இத்தகைய சுரண்டல் அமைப்பைத் தகர்த்தெறிவதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்கம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலக ஆதிக்கம்
“டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு, அமெரிக்காவின் பெரும் முதலாளி எலன் மஸ்க், அரசை வழிநடத்துகிறார். கனடாவை அமெரிக்காவின் ஒரு மாநிலமாகக் கருதுகிறார்கள். உலகில் நடக்கும் எல்லா யுத்தங்களுக்கும் காரணம் அமெரிக்காவே. விற்பனையாகாத அரிசியைவிட, ஆயுதங்களை விற்று அதிக லாபம் பார்க்கும் முதலாளித்துவத்தின் தந்திரமே இந்த போர்கள்,” என்று அவர் விளக்கினார்.
வெற்றிப்படி
“கடந்த மாநாட்டில் நமது முதல் தீர்மானம் – பாஜக அரசை அதிகாரத்திலிருந்து வெளியேற்றுவது என்பதாக இருந்தது. அதன் விளைவாக, வலதுசாரிக்கு எதிராக ஒரு கூட்டணி அமைத்து, பாஜக அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம். இதனால், நாடாளுமன்றத்தில் முன்பு போல எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு சட்டங்களை நிறைவேற்றும் நிலை தற்போது இல்லை,” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
கேரளா மாடல் – மக்களின் வெற்றி
“கேரளாவில் 1957ல் மக்கள் நம் கையில் அதிகாரத்தைக் கொடுத்தனர். அதன் விளைவாக இன்று:
- 96% மக்களுக்கு வீடும் நிலமும் உள்ளது
- 4 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தரமான வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன
- உயர்கல்வியில் 65% பெண்கள் படிக்கின்றனர் – இது உலகிலேயே ஒரு சாதனை
- உத்தரப்பிரதேச மக்களை விட கேரள மக்கள் 15 ஆண்டுகள் அதிகம் வாழ்கின்றனர்
- உலகில் சிசு மரண விகிதம் மிகக் குறைவாக உள்ள மாநிலம்
- ரூ.35,000 மதிப்புள்ள புற்றுநோய் மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன
- நவம்பர் 1ல் ‘தீவிர வறுமை இல்லாத மாநிலம்’ என அறிவிக்க உள்ளனர்.”
அறைகூவல்
“நாம் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம். ஆனால் வீதிகளில் நாம் அதிகம்! அங்கு போராடி வெற்றி பெறுவோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் ஆகியவை வீதிகளில் செங்கொடியேந்தி போராடும்போது, இந்தியா முழுவதும் செங்கொடியால் சூழப்படும். அப்போது இந்திய அரசின் அதிகாரம் இடதுசாரிகளின் கையில் வரும். அன்றுதான் மக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்!” என எழுச்சியுடன் ஏ.விஜயராகவன் முடித்தார்.
மதுரையில் ஏப்ரல் 2-6 தேதிகளில் நடைபெறும் அகில இந்திய மாநாட்டின் பொதுக்கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். அவரது மலையாள உரையை கட்சியின் குமரி மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.ரெஜீஸ்குமார் தமிழாக்கம் செய்தார்.