Sun. Apr 27th, 2025

இந்துத்துவாவுக்கும் மார்க்சியத்திற்கும் தான் இறுதிப்போர் – டி.கே.ரங்கராஜன்

தீக்கதிர்: இன்றைய சர்வதேச, தேசிய அரசியல்  சூழலில் மதுரையில் நடைபெறவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது?

டி.கே.ரங்கராஜன்: மதுரையில் நடைபெறவுள்ள  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு கடந்த மாநாடுகளின் தொடர்ச்சியாகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாடுகளை தனித்தனியாக பார்க்க வேண்டியதில்லை. இன்னும் ஆழமாக ஒரு கம்யூனிஸ்ட் புரிந்து கொள்ள வேண்டும் என்றால்  கட்சி திட்டத்தில் என்ன இருக்கிறது என்பதன் பிரதிபலிப்புகள் கட்சியின் மத்தியக் குழுவின் தீர்மானங்களில் எதிரொலிக்கும். கட்சியின் மத்தியக் குழுவின்  கூட்டுச் செயல்பாடுதான் மாநாட்டு அரசியல் நகல் தீர்மானமாக வழங்கப்பட்டுள்ளது. எனவே எந்த ஒரு அரசியல் தீர்மானத்திற்கும் ஒரு தொடர்ச்சி இருக்கிறது. 24ஆவது மாநாட்டை 22ஆவது 23ஆவது மாநாடுகளின் தொடர்ச்சியாக பார்க்க வேண்டும். கட்சி திட்டத்தின் (தமிழாக்கம்)  7.14இல் பாராவை படித்துப் பார்த்தால் பாஜக குறித்து நமது கட்சி என்ன சொல்லியிருக்கிறது, ஆர்எஸ்எஸ் பற்றி என்ன சொல்லியிருக்கிறது. அது எப்படி இன்று வளர்ந்திருக்கிறது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அந்த மாற்றத்தை படிக்கிறபோதும் பேசும்போதும் நாம் இந்திய மக்களுக்கு சொல்லவேண்டியது இத்தகைய மாற்றங்கள் எப்படி ஏற்பட்டது. இது எதோ தன்னிச்சையாக இந்தியாவில் மட்டும் ஏற்படவில்லை.  உலகம் முழுவதும் வலதுசாரிப் போக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும். 

மதச்சார்பற்ற ஜனநாயக இயக்கங்கள் அவசியம்  

வலதுசாரிகள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். வலது சாரிகளுக்கும் இடதுசாரிகளுக்கும் இடையே கடுமையான முரண்பாடுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தியாவில் ஜனநாயக ரீதியாக இருக்கக்கூடிய ஒரு அமைப்பை மதரீதியாக மாற்றக்கூடிய முயற்சியில் இன்று வலதுசாரிகள்  மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை ஆர்எஸ்எஸ் என்கிற இயக்கம் தன்னை 100 ஆண்டுகளுக்கும் மேலாக தயார்படுத்திக் கொண்டுள்ள இயக்கமாகும். மதச்சார்பற்ற இந்த நாட்டில் உள்ள மக்களை மத ரீதியாகப் பிரிப்பது, பிறகு சாதி ரீதியாகப் பிரிப்பது, பின்னர் சாதியையும் மதத்தையும் கெட்டிப்படுத்துவது என்ற குறிக்கோளுடன் ஆர்.எஸ்.எஸ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் தனது திட்டங்களை பாஜக மூலம் நிறைவேற்றி வருகிறது. இதை  எதிர்த்துப் போராட விரிவான மதச்சார்பற்ற ஜனநாயக இயக்கங்களை உருவாக்க வேண்டியது அவசியமாகும் என்று கட்சியின் மத்தியக் குழு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளது. மக்களைப் பிரிக்கவேண்டும் என்று ஆர்எஸ்எஸ் நினைக்கிறது. நாம்  வர்க்க ஒற்றுமை என்ற பெயரால் மக்களை இணைக்கவேண்டும் என்று நினைக்கிறோம். வர்க்க ஒற்றுமை என்று சொல்கிறபோது தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், சிறு உற்பத்தியாளர்கள், அறிவு ஜீவிகள், சில நேரங்களில் தேசிய முதலாளிகள் கூட இதில் இடம் பெறுவார்கள். அந்த திசையில் நமது இயக்கம் வலுவடைய வேண்டியுள்ளது.

யாருக்கு இடையே  இறுதிப்போர்  

மதுரையில் நடைபெறவுள்ள அகில இந்திய மாநாடு குறித்த கட்சியின் அரசியல் வரைவு தீர்மானத்தை கட்சி உறுப்பினர்கள் அனைவரும் படிப்பதும் பின்னர் மாநாட்டில் நடைபெறக்கூடிய விவாதங்களை கூர்ந்து கவனிப்பதும் எதிர்காலத்தில் அடுத்த 3 ஆண்டுகளில்  நாம் எதை அமல்படுத்த வேண்டுமோ அதை அமல்படுத்த உதவும். கட்சித் தோழர்களும் ஜனநாயக எண்ணம் கொண்ட மக்களும், அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் இந்துத்துவாவுக்கும் மார்க்சியத்திற்கும் தான் இறுதிப்போர். இந்தபயணத்தில் மற்ற எல்லாரும் நம்மோடு வருவார்கள். திடீரென்று அவர்கள் பாதியிலேயே போய்விட்டார்கள் என்றால் வருத்தப்படக்கூடாது. ஆகவே நம்முடைய தளத்தை விரிவுபடுத்துவதில் நாம் மிகுந்த அக்கறை செலுத்தவேண்டும். தளத்தை விரிவுபடுத்துவது என்பது வர்க்கப் போராட்டத்தின் மூலம் தான் சாத்தியம். அதோடு தத்துவார்த்தப் போராட்டத்தையும் நடத்த வேண்டும். எனவே நமது இயக்கத்தை வலுப்படுத்த 24ஆவது மாநாடு பயன்படும். தத்துவார்த்தப் போராட்டம் இல்லாத வர்க்கப்போராட்டமும்  வர்க்கப்போராட்டம் இல்லாத தத்துவார்த்தப் போராட்டமும் ஒரு மார்க்கிய இயக்கத்தை வளர்க்காது.

தீக்கதிர்: இதுவரை எத்தனை அகில இந்திய மாநாடுகளில் பங்கேற்று இருக்கிறீர்கள். கடந்த கால மாநாடுகளின் முக்கியத்துவம் என்ன?

டி.கே.ரங்கராஜன்: கட்சி மாநாடுகளை பொறுத்தவரை நான் 10ஆவது மாநாட்டில் இருந்து கலந்துகொண்டிருக்கிறேன். ஒன்றுபட்ட கட்சியில் இருந்து வெளியேறிய பின்னர் நடந்த 8ஆவது மாநாட்டில் இருந்து நான் கலந்து கொண்டிருக்கிறேன். 9ஆவது மாநாடு மதுரையில் நடைபெற்றது. 10ஆவது மாநாடு சண்டிகரில் நடைபெற்றது. இந்த மாநாடுகள் முழுவதும் அன்றைய கால கட்டத்திற்கு தேவையான விஷயங்களை முறையாகப் பிரதிபலித்தது. உதாரணமாக  இந்திரா காந்தி அறிவித்த அவசரநிலை காலம் என்பது இந்திய நாட்டிற்கும்  ஜனநாயகத்திற்கு  விடப்பட்ட சவாலாகும்.

புதிய சவால்

நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஆளுகின்ற வர்க்கம் அது பாஜகவோ அல்லது காங்கிரஸ் கட்சியோ தங்களுக்கு தேவையான அளவுதான்  வைத்துக் கொள்ளும். அந்த கட்சிகள் முதலாளித்துவ நிலப் பிரபுத்துவ  முதலாளிகளின் ஆதரவுபெற்ற கட்சியாகும்.பெரு முதலாளிகள், பன்னாட்டு முதலாளிகளுடன் இருக்கக்கூடிய கூட்டு ஆகியவற்றின் அடிப்படையில் ஜனநாயகத்தை தேவையான அளவுக்கு மட்டுமே வைத்துக் கொள்வார்கள். எழுத்துரிமை, பேச்சுரிமை இவை எல்லாம் எந்த அளவுக்கு  தேவையோ அதை தருவார்கள். இந்திரா காந்தியின் அவசரநிலைக் காலம் வந்தபிறகு  இந்தியா இனி கிட்டத்தட்ட பழைய இடத்திற்கு போகாது என்கிற நிலைக்கு பலரும் வந்துவிட்டார்கள். கட்சியின் சிந்தனையிலும் அது இருந்தது. ஜனநாயகம் போய்விட்டது.  இனி சர்வாதிகாரம் தான் என்று கருதினார்கள். அப்படியென்றால் நமது வேலை முறையில்  மாற்றம் வருகிறது. புதிய முறையில் தான் நாம் பணியாற்றவேண்டும் என்று நினைத்தோம். ஆனால் இதற்கு நேர்மாறான சம்பவம் நடைபெற்றது.  1977-ஆம் ஆண்டு தேர்தலை இந்திரா காந்தி அறிவித்த உடனே ஜனதா கட்சி இந்திய ஜனநாயகத்தில் ஒருமிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்று சொன்னால் அதற்காக ஜனநாயக உணர்வுள்ள இந்திய மக்களைத்தான்  பாராட்ட வேண்டும்.   இந்த மக்களை யாரும் லேசாக ஏமாற்றிவிடமுடியாது  என்பதை நிரூபித்த தேர்தல் அதுவாகும். அது நமது கட்சியின் 10ஆவது மாநாட்டிலும் பிரதிபலித்தது. அதற்கு பிறகுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை இந்தியா முழுவதும் விரிவுபடுத்தவேண்டும் என்ற சிந்தனையே வந்தது.

கட்சி அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்கள்

10ஆவது கட்சி காங்கிரஸ் முடிவை அமல்படுத்துவதற்கு சால்கியா பிளீனம் என்ற ஒரு சிறப்பு மாநாடு மேற்கு வங்கத்தில் நடைபெற்றது. அதுதான் கட்சியின் ஸ்தாபன அமைப்பு முறையில் ஏராளமான மாற்றங்களை கொண்டு வந்தது. அந்த மாற்றங்கள்  கட்சியின் அமைப்பு முறைகளில் நமது வேலை முறைகளில்  மாற்றங்களைக் கொண்டு வந்தது. அந்த சிறப்பு மாநாட்டின் வழிகாட்டுதல்கள் இன்றும் உயிரோட்டமாக உள்ளது. அதனுடைய தொடர்ச்சியாகத்தான் இந்த மாநாடு நடை பெறவுள்ளது. இந்த மாநாடு நடைபெறும் போதும் உலகில் புதியதொரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஒரு வலதுசாரி சிந்தனைப் போக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை இந்த மாநாட்டிலும் நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. தமிழகத்திலும் அந்த வலதுசாரிப் போக்கு அரசியல் ரீதியில் வலுப்பெற முயற்சிக்கிறது. ஜனநாயகக் கட்சிகளுக்கும் நமக்கும் இருக்கக்கூடிய  முரண்பாடுகள், கருத்துக்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆராய வேண்டியுள்ளது. நம்முடைய கருத்தை மக்கள் மத்தியில் எப்படி கொண்டுச் செல்லவேண்டும், இதர இயக்கங்களை இதர அமைப்புகளை நமது அணியில் சேர்க்கிறபோது வலதுசாரிகளை எதிர்த்துப் போராடுவதற்கு எத்தகைய மாற்றம் அவசியம் என்பதை ஆராய வேண்டும்.

தாய்மொழியின் முக்கியத்துவம்  

தாய் மொழியின் முக்கியத்துவம் குறித்த பிரச்சனை இப்போது முன்னுக்கு வந்துள்ளது. தமிழ் மொழியின் முக்கியத்துவம், தனித்தன்மை பாதிக்கப்படக்கூடாது என்று நினைக்கும் போது, பாதுகாக்கப்படவேண்டும். சென்னை ஒன்றுபட்ட சென்னை ராஜதானியின் தலைநகரமாக இருந்தது.இங்கே மலையாளிகள் உண்டு, தமிழர்கள் உண்டு,கன்னடர்கள் இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள், பஞ்சாபிகள் உண்டு, இந்திய மொழிகள் அனைத்தும் உள்ள ஒரு மாநிலம். தமிழகத்தில் ஏராளமான மொழிபேசும் மக்கள் உள்ளனர். மராத்தி பேசுபவர்களும் உள்ளனர். இவர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி ஜனநாயக உணர்வை அவர்களிடத்தில்  ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருக்கிறது. 24ஆவது கட்சி காங்கிரஸ் இந்த பொறுப்பை மேலும் செழுமையாகச் செய்து முடிக்கும் என்று நம்புகிறேன்.

தீக்கதிர்: மதுரையில் அகில இந்திய மாநாடு 3ஆவது முறையாக நடைபெறவுள்ளது. மாநிலத்தின் தலைநகரை தாண்டி மதுரையில் மாநாடு நடைபெறுகிறது என்றால் எந்தளவுக்கு அந்த மாநகரம் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது ?

டி.கே.ரங்கராஜன்:  மதுரை மாநகரில் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு முதல் முறை நடைபெற்ற போது தற்போதுள்ள மதுரை அப்போது இல்லை. அந்த மதுரை விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், திண்டுக்கல், தேனி சேர்ந்து மதுரையாக இருந்தது. இப்போது மதுரையே  மாநகராகவும் புறநகராகவும் பிரிந்துள்ளது. தொழிலாளி வர்க்கத்தின் இயக்கம் வலுவாக நடைபெற்ற நகரம் என்பதுதான் மதுரையின் சிறப்பாகும். கோட்ஸ் மில், பரவை மில் அங்குதான் இருந்தது.  அங்கு வலுவான தொழிலாளி வர்க்கம் இருந்தது. அந்த வர்க்கத்தின் தலைவர்களாக வி.கார்மேகம் போன்ற தலைவர்கள் இருந்தனர். அன்றைய பாரம்பரியத்தில் கட்சிக்கு வந்தவர்கள் தான் என். வரதராஜன் போன்ற தலைவர்கள். பலர் நினைவில் இல்லை. தீக்கதிர் கடந்த ஒருமாதமாக  அந்த தலைவர்களை நினைவு கூர்ந்து புகைப்படத்துடன் கட்சி தோழர்களுக்கும் வாசகர்களுக்கும் நினைவு படுத்தி வருவது பாராட்டத்தக்கது. கட்சி குறித்த நல்ல புரிதலை இன்றைய தலைமுறையினரிடம் ஏற்படுத்த இத்தகைய முன்னெடுப்புகள் உதவும்.

மதுரையின் சிறப்புகள்

மதுரையில் பெண்களை அணிதிரட்டி போராட்டங்களை நடத்தியதில் தோழர் ஜானகியம்மாவுக்கு பெரும்பங்கு உண்டு. அவர்கள் தலைமையில் நடைபெற்ற போராட்டங்கள் தமிழகத்திற்கே வழிகாட்டியது. மதுரைக்கு மற்றொரு சிறப்பு, அங்குதான் நமது கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான தீக்கதிர் தலைமை அலுவலகம் உள்ளது. 1967 தேர்தல் முடிந்தவுடன் தற்போதுள்ள தீக்கதிர் கட்டிடத்தை வாங்கிக்கொள்ள காங்கிரஸ் தலைவர்  காமராஜர் மிகுந்த ஆர்வம் காட்டினார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் பத்திரிகை கொண்டுவர  அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்றுவிட்டது.  இதனால்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.எஸ்.கே.அய்யங்கர்  தோழர் பி.ஆரை அணுகி அந்த கட்டிடத்தை வாங்கிக் கொள்ளுமாறு கூறினார். பி.ஆரும் அதை வாங்கிக் கொண்டார். இப்படித்தான் அந்த கட்டிடம் நமது கட்சிக்கு கிடைத்தது. அற்புதமான இடம். அங்கு பணியாற்றிய தோழர்கள் கே.முத்தையா, ஏ.அப்துல் வகாப் போன்றவர்கள் போராட்டத்தில் புடம் போட்டவர்கள். தினமணி, தமிழ் இந்து போன்ற பத்திரிகை அல்ல, தீக்கதிர். இது ஒரு வர்க்கப் பத்திரிகை. கடும் சிரமங்களுக்கு இடையே அந்த பத்திரிகையை நமது தோழர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எனவே மதுரையில் நடைபெறவுள்ள மாநாட்டில் தீக்கதிர் ஒரு முக்கியப் பங்கை ஆற்றவேண்டும். பழமையையும் வரலாற்றையும் மறக்காமல் புதுமையான மாற்றங்களோடு தீக்கதிர் வெளிவரவேண்டும்.

தீக்கதிர்: முதலாளித்துவ முரண்பாடுகளுக்கு மத்தியில் அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் மேற்கொள்ளக்கூடிய அதிரடி நடவடிக்கைகள் இந்தியா போன்ற நாடுகளுக்கு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்?

டி.கே.ரங்கராஜன்: முதலாளித்துவ முரண்பாடுகள் என்பது சந்தையில் இருந்து வரக்கூடிய, போட்டியில் இருந்து வரக்கூடியது. சந்தைக்கான போராட்டம் நடக்கிறபோது இன்று அமெரிக்கா தனியாக நிற்கவேண்டும் என்று நினைக்கிறது.  ஐரோப்பாவுடன் கூட்டுச் சேர்வதில் பயனில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டது. நேட்டோ என்று சொல்லக்கூடிய ராணுவக் கூட்டணியில் நாம் மட்டும் ஏன் அதிக தொகையை செலவிடவேண்டும் என்று அமெரிக்கா நினைக்கிறது. மற்ற நாடுகளும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 விழுக்காடு 4 விழுக்காடு தொகையை செலுத்தட்டும் என்று கருதுகிறது. ஆனால் அப்படி தொகையை வழங்கக்கூடிய இடத்தில் ஐரோப்பிய நாடுகள் இல்லை. ஜெர்மனியும் பிரான்சையும் தவிர, மற்ற ஐரோப்பிய நாடுகள் வலுவாக இல்லை.

அமெரிக்காவை பகைத்துக்கொள்ள  மோடி தயாராக இல்லை

அமெரிக்கப் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும் என்று டிரம்ப் நினைக்கிறார்.அதை சொல்லித்தான் தேர்தலில் அவர் வெற்றிபெற்றுள்ளார். எனவேதான் அமெரிக்காவுக்குள் வரக்கூடிய வெளிநாட்டுப் பொருட்கள் மீது அதிக வரிகளை அவர் விதிக்கிறார். ஐரோப்பா, மெக்சிகோ, கனடா, சீனா, இந்தியா என  பல நாடுகள் மீது  கடுமையான வரிகளை விதித்துள்ளார். இது ஏற்றுமதி செய்யக்கூடிய நாடுகளின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும். இது இந்த நாடுகளிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும். அமெரிக்காவால் பாதிக்கப்படும் நாடுகள் என்ன செய்யப்போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இன்றைய சூழலில் அமெரிக்காவை பகைத்துக்கொள்ள எந்த நாடும் தயாராக இல்லை. இந்திய பிரதமர் மோடி டிரம்ப்பை சந்தித்து  சலாம்போட்டு வருகிறார். கனடா முறைக்கிறது.  கனடா எப்போதும் பிரிட்டனுடன் நெருக்கமாக இருக்கும். அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் சகோதார உறவு இருக்கிறது. எப்போதும் அவர்களுக்குள் பிரச்சனை வராது.இப்போதும் பிரிட்டனை தவிர மற்ற நாடுகளை அவர்கள் நடத்தும் விதம் வேறுமாதிரியாக இருக்கும். ஆகவே புதிய உலக சூழ்நிலை வளர்ந்து கொண்டிருக்கிறது. அதை 24ஆவது கட்சி காங்கிரசும் ஆழமாக விவாதிக்கும்.

தீக்கதிர்:  ஜனநாயகத்தின் பலமே விவாதமும் கலந்துரையாடலும் தான். நமது நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகம் நாளுக்கு நாள் தேய்ந்து வருகிறது. முக்கியமான பிரச்சனைகளை விவாதிக்க மோடி அரசு தயங்குவது ஏன்?  

டி.கே.ரங்கராஜன்:  நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரிக்கும் போது அது குறித்து பேச நாடாளுமன்றம் தயாராக இல்லை. பண்டித ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்தபோது நாடாளுமன்றம் ஆண்டுக்கு 120 நாட்கள் முதல் 130 நாட்கள் வரை கூடியது.அது இப்போது 60 நாள் 70 நாட்களாக குறைக்கப்பட்டுவிட்டது. நான் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தபோதுகூட, நாடாளுமன்ற கூட்டத்தொடர் 90 நாட்கள் நடைபெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் பல நிலைக்குழுக்கள் அமைக்கப்படவில்லை. இருக்கும் குழுக்களும் முழுமையாக கூடுகிறதா என்றால் இல்லை. நாடாளுமன்ற விவாதங்களையும் எவ்வளவு சுருக்கமுடிமோ அந்த அளவுக்கு சுருக்குகிறார்கள். வர்த்தகம் உள்பட பல நாடுகளுடன் போடும் ஒப்பந்தம் குறித்து கூடபேசுவதற்கு அரசு தயாராக இல்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு வெளியேதான் பொருளாதாரப் பரிவர்த்தனைகளை அரசு வைத்துக்கொள்கிறது. அபூர்வமாக சில நேரங்களில் தலையிட்டு பதில் சொல்வார்கள்.

அதிகார வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் நாடாளுமன்றம்  

இந்திய நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு என்பதே ஒரு விவாத சமூக அமைப்பாகும். ஆனால்  இந்தியாவை நிர்வாகம் செய்யும் அதிகார வர்க்கம் அதற்கு அனுமதிப்பதில்லை. இன்று அதிகார வர்க்கமும் நீதித்துறையும் பலமாகி வருகிறது. இவை இரண்டும் பலமாகிக் கொண்டிருப்பது நாடாளுமன்ற  ஜனநாயகத்தை அரித்துவிடும்.இந்திய ஜனநாயகத்தை மேலும் எப்படி வலுப்படுத்துவது, அதற்கு எந்தமாதிரியான போராட்டங்களை நடத்துவது என்பதை இடதுசாரி ஜனநாயக இயக்கங்கள்  திட்டமிடவேண்டும். அதற்கான முன்னெடுப்பை மேற்கொள்ள மதுரையில் நடைபெறவுள்ள கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு முயற்சிகளை மேற்கொள்ளும்.

தீக்கதிர்: உலகில்  வறுமை, வேலையின்மை, விலைவாசி உயர்வு என மக்கள் பாதிக்கப்படும் போது அவர்களின் பக்கம் இடதுசாரிகள் நிற்கிறபோதிலும் அவர்களுக்காகப் போராடும் போதும் இலங்கை, பிரேசில் உள்ளிட்ட தென் அமெரிக்கா தவிர பல நாடுகளில் வலதுசாரிகளை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏன் ஏற்படுகிறது. மக்களின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு என்ன காரணம்?

டி.கே.ரங்கராஜன்: 19ஆவது நூற்றாண்டில் இருந்த தொழில், வேலை வாய்ப்புகளும் 20ஆவது நூற்றாண்டில் இருந்த தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளும் 21ஆவது நூற்றாண்டில் மாற்றம் அடைந்துள்ளன. 1970 – 80 களுக்கு பிறகு உலகில் வந்துள்ள மாற்றங்கள் ஐந்தாவது தலைமுறை மாற்றங்களாகும். இது தொழில்புரட்சியின் 5ஆவதுகட்டம்.  இந்த 5ஆவது கட்டத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகளவில் இயங்குகின்றன.  இப்போது செயற்கை நுண்ணறிவை புகுத்தப்போவதாக சொல்லி வருகின்றனர். ரோபோக்கள் அதிகளவில் வேலை செய்கின்றன.பள்ளி பாடப் புத்தகங்களும் மாறிவிட்டன. இத்தகைய சூழலில் படித்து வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. படிக்காதோர் வேலையில்லா திண்டாட்டமும் அதிகம். இது உலகம் முழுவதும் உள்ள நிலைமைதான். இந்த மாறுதல் குறித்து இடதுசாரி ஜனநாயக இயக்கங்கள் கவலை கொள்ள வேண்டும். இந்த மக்களுக்காக போராடவேண்டிய வர்க்கத்தேவை இடதுசாரிகளுக்கு இருக்கிறது. இதுபோன்ற பிரச்சனைகள் தான் உலகத் தொழிலாளர்களை ஒன்று சேர்க்கும். இன்று உலக முதலாளிகள் ஒன்று சேர்ந்து முதலீடு செய்யும் நிலை உருவாகியுள்ளது.  தொழிலாளி, விவசாயி வர்க்க ஒற்றுமையை உருவாக்குவதில் நாம் பலவீனமாக இருப்பதற்கு காரணமே இன்றைய சூழ்நிலையை நாம் முழுமையாக புரிந்து கொள்வதில் உள்ள போதமைதான். எனவே அதிகமாக நமது தொழிற்சங்க இயக்கங்கள், விவசாய இயக்கங்கள், கட்சி இதில் கவனம் செலுத்தவேண்டும். இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்.  

சந்திப்பு : அ.விஜயகுமார்

Related Post