பாஜக – ஆர்எஸ்எஸ் ஆட்சியை வீழ்த்தும் போராட்டத்தில் சமரசமற்று முன்னேறுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் சூளுரைத்தார். கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு ஏப்.2-6 தேதிகளில் மதுரையில் நடைபெறு கிறது. இதனையொட்டி துறைமுகம் பகுதி சார்பில் வியாழனன்று (மார்ச் 20) மத்திய சென்னை, மண்ணடியில் மாநாட்டு பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத் தில் மாவட்டம் முழுவதும் சேகரிக்கப்பட்ட நிதியை பகுதி, இடைக்குழுச் செயலாளர்கள் பிருந்தா காரத்திடம் வழங்கினர். அதனை பெற்றுக் கொண்டு அவர் பேசியதாவது: “கார்ல் மார்க்ஸ் நினைவு நாளான மார்ச் 14 அன்று காலை 10 மணிக்குத் தொடங்கி மறு நாள் காலை 10 மணி வரை, 24 மணி நேரம் இடைவிடாத புதுமையான பிரச்சார இயக்கம் நடைபெற்றுள்ளது பாராட்டுக்குரியது.
உழைப்பாளி வர்க்க கட்சி
நாடாளுமன்றத்தில் கொடுக்கப்பட்ட புள்ளி விவரப்படி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கும் தொகை 16 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய். இப்படி யெல்லாம் பெருந்தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகளைக் காட்டி பாஜக-ஆர்எஸ்எஸ் இரண்டும் பதிலுக்குப் பெருந்தொகையை இவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு விடுகின்றனர். மாறாக, நாம் திரட்டும் நிதி வர்க்க ரீதியாக உழைப்பாளி மக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது.
நரமாமிச வாதிகள்
உலகளாவிய அளவில் இருள் மேகங்கள் கவிந்துள்ள காலமிது. நரமாமிசம் தின்னும் வெறியோடு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு போர் வெறியைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறது. அமெரிக்க ஏகாதி பத்திய ஆதரவு இருப்பதன் காரணமாக யூத இன வெறி பிடித்த இஸ்ரேல் அரசு பாலஸ்தீன மக்கள் மீது கொலைவெறித் தாக்குதல்களை நடத்திக் கொண்டே இருக்கிறது. மிக அண்மை யில், இவர்கள் நடத்திய வான்வெளி தாக்குத லில் ஒரே நாளில் 419 உயிர்கள் காவு வாங்கப் பட்டுள்ளன. அண்ணல் காந்தி அந்நாட்களிலேயே, பாலஸ்தீனம் அரேபியர்களுக்கு, பாலஸ்தீன மக்களுக்கு உரிமையானது என்று குறிப்பிட்டு இருந்தார். இன்றோ காசா பகுதியில் நடக்கும் மனிதாபிமானம் அற்ற இந்த கொடூரத் தாக்குதல் குறித்து வாய் திறக்காது மோடி அரசு மௌனமாக இருப்பது அவமானத்திற்குரிய விஷயமாகும்.
உலகமயமும், சர்வ தேசியமும்
லாபவெறி மிக்க முதலாளித்துவம் பேசும் உலகமயத்திற்கும், கம்யூனிஸ்டுகள் கூறும் சரவதேசியத்திற்கும் தெளிவான வேறுபாடு இருக்கிறது. உலக உழைப்பாளி மக்களைச் சுரண்டத் துடிக்கும் அவர்களது கூச்சல் தான் அந்த உலகமயம். சுரண்டலற்ற – பாகுபாடுகள் இல்லாத உன்னதமான சமூகத்தைப் படைக்க நாம் எழுப்பும் முழக்கம் சர்வதேச ஒருமைப் பாடு. இந்த உணர்வோடு தான் மதுரையில் நடை பெற இருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு சர்வதேச ஒருமைப் பாட்டுக்கான குரலை முன்னெடுக்கும். பாஜக-ஆர்எஸ்எஸ் முறியடிக்கப்பட வேண்டும் என்று மதுரை மாநாடு, இந்திய மக்கள் முன்பாக அறைகூவல் விடுக்கும். ஜன நாயகத்தை, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை, கூட்டாட்சியை பாதுகாக்க வேண்டும் எனில் பாஜக ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம். தேச மக்கள் ஒற்றுமையை, அவர்கள் காலகாலமாகக் கடைப்பிடித்து வரும் பன்மைத்துவத்தைச் சீர்குலைக்கத் துடிக்கும் பாஜக ஆட்சிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியின் செங்கொடி இயக்கம் நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
தொகுதி மறுசீரமைப்பு மோசடி
நாடாளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைப் போம் என்று இறங்கியுள்ளது மோடி அரசு. அவர்களது உள்நோக்கம், தெற்குப் பகுதியி லுள்ள மாநிலங்களின் பிரதிநிதித்துவம் தேவைப்படாத அளவு ஒரு நாடாளுமன்றப் பெரும்பான்மையைத் தங்களுக்குத் தக்க வைப்பதாகும். ஏனெனில், தென்னிந்திய மக்கள் பாஜக ஆட்சியின் மோசமான நட வடிக்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைச் சீரிய முறையில் நடைமுறைப்படுத்தி மக்கள் தொகை யைக் கட்டுக்குள் வைத்த மாநிலங்களைப் பழி வாங்கி, அவர்களுக்கான தொகுதி எண்ணிக் கையைக் குறைக்கும் ஏற்பாடு தான் இந்த மறு சீரமைப்பு. இந்த மாநிலங்கள் எட்டியுள்ள வளர்ச்சி, முன்னேற்றத்தையெல்லாம் பழிக்கும் மோசமான செயல் இந்த மறுசீரமைப்பு. இந்தப் புதிய வரையறையை ஏற்க முடியாது என்று குரல் கொடுத்து, மாநில ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் திமுக, மார்ச் 22ஆம் தேதி நடத்த உள்ள கூட்டம் மிக முக்கியமானது ஆகும். அதற்கு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நாம் ஆதரவு தெரிவித்து உள்ளோம்.
கூட்டாட்சிக்கு எதிரான பாஜக அரசு
மாநிலங்களுக்கு எதிரான பாரபட்சத்தை ஒன்றிய ஆட்சியாளர்கள் பல்வேறு வகை களில் செய்து கொண்டிருக்கின்றனர். இந்தியா விலேயே பல முன்னேற்றகரமான நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது தோழர் பின ராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநா யக முன்னணி அரசு. கேரளத்திலிருந்து ஒன்றிய அரசுக்குக் கிடைக்கும் நூறு ரூபாய் வரி வருவாய்க்குப் பதிலாக கேரளத்திற்குத் திரும்பக் கிடைக்கும் நிதி ஒதுக்கீடு வெறும் 21 ரூபாய் தான். தமிழ கத்திற்கு 27 ரூபாய். ஆனால், பீகார் மாநிலத் திற்கு அவர்கள் செலுத்தும் நூறு ரூபாய் வரித் தொகைக்குப் பதிலாக 70 ரூபாய் நிதி கிடைக்கிறது. மதுரையில் நடைபெறும் 24ஆவது அகில இந்திய மாநாட்டை ஒட்டி ஒன்றிய அரசின் பாரபட்சங்களுக்கு எதிராகவும், கூட்டாட்சியை வலுப்படுத்தும் முழக்கத்தோடும் மிக முக்கியமான கருத்தரங்கு நடைபெற உள்ளது.
இந்துத்துவா என்பது பிற மதத்தினருக்கு எதிரான வெறுப்பு
முற்றிலும் கார்ப்பரேட் ஆதரவு ஒரு பக்கம், இந்துத்துவ வெறி மறுபக்கமுமாக பாஜக ஆட்சி செயல்படுகிறது. அவர்கள் சொல்லும் இந்துத்து வாவுக்கும், இந்து மத நம்பிக்கைக்கும் கிஞ்சி ற்றும் தொடர்பில்லை என்று நாம் தெளிவாக்க வேண்டும். சங் பரிவாரம் பேசும் இந்துத்துவா, பிற மதத்தினருக்கு எதிரான வெறுப்பு உணர்வு. அதன் மூலம் ஏற்படுத்தும் கலவரங்கள் என்பதை நாம் தெளிவாக்க வேண்டும். இது இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு நோற்கும் மாதமாகும். இதே மாதத்தில் தான் வடமாநிலங்களில் ஹோலி பண்டிகையும் கொண்டாடப்பட்டது. உத்தரப்பிர தேச மாநிலத்தில் உயர் பதவி வகிக்கும் காவல் துறை அதிகாரி ஒருவர், இஸ்லாமியர்களுக்கு ஹோலி பண்டிகையின் வண்ணம் பிடிக்க வில்லை என்றால் அவர்கள் மசூதிக்குச் செல்ல வேண்டாம் என மிரட்டல் விடுத்தார்.
தொழிலாளர் விரோத அரசு
தொழிலாளர் நலச் சட்டங்களை வெறும் 4 சட்டத் தொகுப்புகளாக மாற்றி உடனே நடை முறைக்குக் கொண்டுவருகிறது பாஜக அரசு. தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று நாடு முழுவதும் வேலை நிறுத்தம் நடத்த அறை கூவல் விடுத்துள்ள மத்திய தொழிற்சங்கங் களின் போராட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
சமரசமற்ற போராட்டத்தில் பறக்கும் செங்கொடி
தொழிலாளர்களுக்காக, விவசாய பகுதி யினருக்காக, சிறுபான்மையினர், தலித் பழங்குடி மக்கள், பெண்கள் நலனுக்காகச் செங்கொடி ஏந்தி மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. பட்டொளி வீசிப் பறக்கும் செங்கொடியின் போராட்டங்களில் தமிழ்நாடும் முக்கிய பங்கு வகிக்கிறது. மனுவாத-கார்ப்பரேட் ஆதரவு பாஜக ஆட்சிக்கு எதிரான சமரசம் அற்ற போராட்டங்களில் மார்க்சிஸ்ட் கட்சி முன்னிற்கிறது.
தோழர் யெச்சூரியின் மறைவு பேரிழப்பு
மதுரையில் அகில இந்திய மாநாடு நடை பெறும் இந்த நேரத்தில், தோழர் சீதாராம் யெச்சூரியை நாம் நினைவு கொள்கிறோம். மிகவும் முக்கியமான நேரத்தில் நேர்ந்துவிட்ட அவரது மரணம் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும். ஆனாலும், கம்யூனிஸ்டுகள் கூட்டுச் செயல்பாட்டில் இயங்குபவர்கள். கிளை மட்டத்தில் இருந்து அரசியல் தலைமைக் குழு வரை அனைத்து மட்டங்களிலும் உள்ள கட்சி ஊழியர்கள் ஒன்றுபட்டுக் கூட்டாகச் செயல்படு வதன் மூலமே நாம் நமது இயக்கங்களை நடத்தி வருகிறோம். நம்முன் உள்ள கடமைகளை ஆற்று வதற்கு அடிப்படையாக நமது கட்சியை மேலும் வலுப்படுத்துவது இன்றியமையாதது ஆகும். அந்தத் திசையில் நமது சொந்த வலுவைப் பெருக்கியபடி சவால்களை எதிர்கொண்டு முன்னேறுவோம். அதே வேளையில் பாலின சமத்துவத்தை நம் தோழர்கள் உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும், இன்னும் சமைய லறை என்றாலே பெண்களுக்கானது என்ற நிலை மாறி, ஆண்களும் வேலை பகிர்வை மேற்கொண்டால் நமது இயக்கங்களில் பல மடங்கு அதிகமான அளவில் பெண்களின் பங்கேற்பும் சாத்தியப்படும்.” இவ்வாறு அவர் பேசினார். பிருந்தாகாரத்தின் ஆங்கில உரையை கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.வி. வேணுகோபாலன் மொழியாக்கம் செய்தார். இந்தக் கூட்டத்திற்கு மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமை தாங்கினார். துறைமுகம் பகுதிச் செயலாளர் ஆர்.குமார் வரவேற்றார். மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாவட்ட வரவேற்புக்குழுத் தலைவர் எம்.வி.கிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் சி.திருவேட்டை, எம்.தனலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.அருள் குமார் நன்றி கூறினார். புதுகைபூபாளம் குழுவினரின் அரசியல் நையாண்டி நிகழ்ச்சியும் நடைபெற்றது.
